அழகு

அழகு என்னும் பதத்திற்கு ஒவ்வொரு தனிமனிதனும் ஆயிரம் அர்த்தங்களைக் கூறுவான். ஒவ்வொருவரின் சிந்தனையும் எண்ணங்களும் பல்வேறு கோணங்களில் அமையும்போது அவற்றிற்கு ஒரு வரைவிலக்கணத்தை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.
அழகு என்பது இன்று உலகை ஏதோ ஒரு வகையில் ஆட்டிப்படைக்கின்றது. எல்லாப் பொருட்களும் அழகுமயப்படுத்தப்பட்டு பல்வேறு வழிகளில் உலகம் முன்னேற்றம் அடைந்தாலும் சில விடயங்களில் பாதிப்புக்களையயும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒருபொருளின் உண்மையான தரம் அறியமுடியாமல் போகின்றது. சில சந்தர்ப்பங்களில் போலியை நம்பி ஏமாற வேண்டியும் ஏற்படும்.
புலம்பெயர் நாடுகளில் அழகுக்குத் தனி மரியாதை உண்டா என்று பார்க்கும்போது அங்கே அடிக்கடிமாறும் நாகரிகம் தான் முன்னிடம் வகிக்கின்றது எனலாம். அழகுசாதனப் பொருட்களாலும் ஆடம்பர அணிகலன்களாலும் அழகுபடுத்தப்படுவதால் பொருளாதாரப் பிரச்சினைகளையும் சூழல் மாசடைதல் போன்ற பல்வேறு சிரமங்களையும் நாம் எதிர்கொள்கிறோம். எவ்விதப் பிரச்சினைகளை நாம் சந்தித்தாலும் அழகிலேயும் ஆடம்பர வாழ்விலும் உலகம் மயங்கி இருப்பது என்பதுதான் உண்மை.
உண்மையில் அழகு என்றால் என்ன?அழகை நாம் இருகூறுகளாகப் பார்க்கலாம். கவிஞர்கள் இயற்கையை வர்ணித்து எழுதும் கவிதை வரிகளிலும் ஏழ்மையின் எளிமையில் எழுதும் கதைகளிலும் எழிலைக் காணலாம். ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அழகிருக்கும். ஒவ்வொன்றினதும் சீரான ஒழுங்கமைப்பு அழகு என்பதை விளக்கும். ஒரு பொருள் அது கொண்டிருக்க வேண்டிய சகல சிறப்பம்சங்களையும் தன்னுள் அடக்கும் போதுதான் அது அழகாகத் தென்படும். அதன் பொருட்டுச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்த்தால் ஒரு குடும்பம் எப்போது அழகாக இருக்கும் என்றால் அங்கே நிம்மதி, அமைதி, ஆரோக்கியம், புரிந்துணர்வு மனமகிழ்ச்சி இவை அனைத்தும் ஒருங்கே அமையும்போது அதில் அழகு மிளிரும் குடும்பம் எனலாம். ஒரு மனிதன் எப்போது அழகாகின்றான் என்றால் அவன் ஆரோக்கியமாகவும் ஆளுமையாகவும் செயற்றிறன் உள்ளவனாகவும் நல்ல பண்புகளைவும் நற்குணங்களைவும் கொண்டவனாகவும் எதிலும் நிதானம் உள்ளவனாகவும் எப்போது இருக்கின்றானோ அப்பொழுதெல்லாம் அழகாகத் தென்படுவான். இதைக் காலத்தால் அழியாத அழகு என்று கூறலாம்.

ஜனனி

3 kommentarer:

  1. அழகு பற்றி மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். அழகு பற்றிய வழமையான சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள். முதிர்ச்சியான மொழி நடை. ஜனனிக்கு எனது பாராட்டுக்கள். கேமா

    SvarSlett
  2. நல்ல பதிவு. எளிமையான அழகான நடை. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

    SvarSlett
  3. உங்கள் எழுத்துக்கள் உங்கள் திறமையைக் காட்டுகின்றது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுவதன் மூலம் மென்மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

    SvarSlett